ரூ.437 கோடியே 78 லட்சம் செலவில் தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியில் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
* ரூ.437 கோடியே 78 லட்சம் செலவில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) ஏற்படுத்தப்படும். இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும்.
* ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் ரூ.60 கோடி செலவில் 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஏற்படுத்தப்படும்.
* பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது. இதற்காக, ஒரு லட்சம் சதுர அடியில் ரூ.33 கோடி செலவில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். இந்த கட்டிடம் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடம்’ என்ற பெயரில் அழைக்கப்படும்.
* ரூ.39.1 கோடி செலவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
No comments:
Post a Comment