பொறியியல் சேர்க்கைக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை மாணவர்கள் திங்கள்கிழமை முதல் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள பி.இ. இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்கள் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 1.70 லட்சம் பேர் ஆன்-லைன் பதிவை செய்திருந்தனர். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் ஜூன் 3-ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், 1.60 லட்சம் பேர் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த வார இறுதியில் அல்லது வரும் திங்கள்கிழமை முதல் தங்களுடைய விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா என்பதை அண்ணா பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, விடுபட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க கால அவகாசம் அளிக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் இந்துமதி, பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இந்த வார இறுதிக்குள் இந்தப் பணிகள் முடிவடைந்துவிடும். அதன் பிறகே எத்தனை விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளன என்ற விவரம் தெரியவரும் என்றார்.
No comments:
Post a Comment