இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, June 28, 2017

ஆகஸ்ட் 1-இல் ரயில் கட்டண உயர்வு அறிவிப்பு: செப்டம்பர் முதல் அமலாகும்


ரயில் கட்டண உயர்வு ஆகஸ்ட் முதல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாகவும் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி மூலம் ஏற்கெனவே கணிசமான அளவில் பயணிகள் கட்டணம் உயரும் நிலையில், மேலும் பயணிகள் கட்டணம் அதிகரிக்கும் என்ற செய்தி பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு ஒப்புதல்: இந்திய மக்களில் அதிகமானோர் பயன்படுத்தும் பொது போக்குவரத்து சேவையாக ரயில்வே திகழ்ந்து வருகிறது. நாட்டில் உள்ள பிற போக்குவரத்து கட்டணங்களைக் காட்டிலும் ரயில்வே பயணக் கட்டணம் குறைவு என்பதும் இதற்கு ஒரு காரணமாகும். இந்தச் சூழலில் பல்வேறு அமைச்சகங்களுடன் பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ரயில்வேயின் நிதி நிலைமை, உள்கட்டுமானம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இப்போது இதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ரயில் கட்டண உயர்வு குறித்து ஆகஸ்ட் முதல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். செலுவுகளை சமாளிக்க...: எரிபொருள் செலவு, ஊழியர் சம்பளம் என ரயில்வேக்கு ஒவ்வொரு ஆண்டும் செலவு அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில்தான், இழப்புகள் மற்றும் செலவுகளைச் சமாளிப்பது குறித்து கடந்த ஏப்ரலில் ரயில்வே தரப்பில் ஆய்வறிக்கை ஒன்று மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் சமூக சேவைகளுக்காக மட்டும் ரயில்வேக்கு ரூ.27 ஆயிரம் கோடி வரை செலவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே செலவுகள் மற்றும் இழப்புகளைச் சமாளிக்கும் வகையில் விரைவில் ரயில்வே பயணக் கட்டணம் உயர்த்தப்படும். எவ்வளவு உயரும் ?: இப்போதைய சூழ்நிலையில் படுக்கை வசதிகொண்ட பெட்டிகளில் குறைந்தபட்ச கட்டண உயர்வை மட்டுமே மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ஏசி மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, முதல் வகுப்பு ஆகியவற்றில் பெருமளவு கட்டணத்தை உயர்த்த ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. பயமுறுத்தும் ஜிஎஸ்டி: ஜூலை 1 முதல் சேவை வரிக்கு மாற்றாக ஜிஎஸ்டி வரி அமலாகவுள்ளது. இதனால், குளிர்சாதன ரயில் பயணத்துக்கு 5 சதவீதம் வரை கட்டணம் உயருகிறது. இந்தக் கட்டண உயர்வு, ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்பு முன்பதிவு செய்தவர்களுக்கு பொருந்தாது என்று ரயில்வே வாரியம் தெரிவிக்கிறது.

மேலும் குளிர் சாதன மற்றும் முதல் வகுப்பு பயணிகள் ஜூலை 1 முதல், இருவழிக்கான பயணச்சீட்டை ஒரே பயணச்சீட்டாக பெற முடியாது. ஜிஎஸ்டி க்கான வரைமுறைபடுத்துதல் காரணமாக செல்வதற்கு தனி பயணச்சீட்டு, திரும்பி வருவதற்கு தனி பயணச்சீட்டு என தனித்தனியாகத்தான் வழங்கப்படும். புறநகர் பயணிகள், இருவழிப் பயணச்சீட்டை பெற வேண்டுமானால், பயணம் தொடங்கும் இடம் மற்றும் போய் சேரும் இடம் இரண்டும் ஒரே மாநிலத்தில் இருக்க வேண்டும். ஒரு சில மண்டல ரயில்வேகள், பயணத்தை தொடங்கிய இடத்திலேயே பயணத்தை முடிக்கும் ஆன்மீக பயணம் அல்லது சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளுக்கு டெலஸ்கோப் கட்டணம் அடிப்படையில் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. ஜூலை 1 முதல் இந்த நடைமுறையும் ரத்து செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment