தமிழ்நாட்டில் 584 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சேருவதற்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இவர்களுக்கு ரேண்டம் எண்ணும், ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட்டன.
கலந்தாய்வு கடந்த 27-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் தொடங்கவில்லை. சில மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் என இரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பித்து உள்ளனர். மருத்துவத்தில் இடம் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் என்ஜினீயரிங் சேருவார்கள். எனவே எப்போதுமே மருத்துவ கலந்தாய்வு தொடங்கிய பின்னர்தான் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்குவது வழக்கம்.
இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது. கடந்த வருடம் மருத்துவ கலந்தாய்வுக்கும், என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கும் இடையே ஒரு வாரம் இடைவெளி இருந்தது. எனவே இந்த ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு, ஜூலை மாதம் 3-வது வாரம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு விரைவில் வருகிறது. என்ஜினீயரிங் கலந்தாய்வு எப்படியும் 28 நாட்களாவது நடக்கும். எனவே என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் தாமதமாக தொடங்கினால் அதற்கான அனுமதியை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில்(ஏ.ஐ.சி.டி.இ.) பெறப்படும். இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment