தமிழகத்தில் 18 முதல் 20 வயது வரை உள்ள இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 1,500 கல்லூரிகளில் இன்று முதல் 30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் 18 வயது முதல் 20 வயது வரை உள்ள இளைஞர்கள் அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
இதை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம், இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நாடு முழுவதும் ஒரு மாதம் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1,500 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நேரடியாக சென்று ஒவ்வொரு கல்லூரியிலும் 5 பேருக்கு ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் விண்ணப்பம் செய்வது எப்படி என்று பயிற்சி அளிப்பார்கள்.
அதேபோல், தமிழகம் முழுவதும் இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் ஜூலை 9 மற்றும் 23ம் தேதி (ஞாயிறுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment