மத்திய அரசின் அனைத்து வித போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில், தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய பயிற்சித் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோவையில் சி.எஸ்.ஐ. மண்டல கூட்டுக் கல்விக் குழு சார்பில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கியும், ஒரு லட்சம் பழமரக் கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தும் திங்கள்கிழமை அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கல்விப் புரட்சி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏழைக் குழந்தைகளுக்கும் அடிப்படை உயர் கல்வி கிடைக்கும் வகையில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன; மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துவித போட்டித் தேர்வுகளையும் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்வதற்கு அவர்களின் திறனை வளர்க்கும் வகையில், புதிய பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும் மாணவர்களுக்கு கல்வியுடன், மனிதநேயத்தை வளர்க்கும் வகையில் பாடவேளைகள் அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் 3,000 ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
9}ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் கணினி வழிக் கல்வியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்துக்குப் பிறகு பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோவை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கல்வித் துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்காக, இதுவரை 41 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு உதவிடும் வகையில் 54,000 வினா}விடைகள், வரைபடங்கள் அடங்கிய தொகுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக கல்வித் துறையைச் சார்ந்தவர்களிடம் இருந்து கருத்துகள், ஆலோசனைகள் பெறப்படுகின்றன. சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் ஏழைப் பெற்றோர் கடனாளிகளாக மாறும் சூழல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக மாநில கல்வித் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைத்து, அதன் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை விரும்பிச் சேர்க்கும் அளவுக்கு அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே தனியார் பள்ளிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் புகார் அளிக்கலாம் என்றார்.
No comments:
Post a Comment