முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011ம் ஆண்டு 110 விதியின் கீழ் பகுதிநேர சிறப்பாசிரியர் பணியிடங்களை அறிவித்தார். 2012 மார்ச் 5ம் தேதி அரசு பள்ளிகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, நெசவு, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடகலை, வாழ்க்கை கல்வி ஆகிய பணியிடங்களில் 16,549 பேர் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு 3 அரை நாள் வேலைக்கு, ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வந்தது.
2013ல் ஊதிய உயர்வு வழங்கவில்லை. ஊதியம் போதாது என ஆசிரியர்கள் தமிழக அரசிடம் மன்றாடினர். அரசு செவிசாய்க்காததால் 1,380 ஆசிரியர்கள் ராஜினாமா செய்தனர். நவம்பர் 18 2014ல் வெளியிட்ட அரசாணைப்படி பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ.2ஆயிரம் ஊக்க ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆசிரியர்களுக்கு ரூ.7 ஆயிரமாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2015-16, 2016-17 ல் ஊக்க ஊதியத்தை தமிழக அரசு உயர்த்தவில்லை. பலமுைற பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம் ரூ.700 வழங்கப்படும் என நேற்று முன்தினம் அறிவித்தது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஊக்க ஊதியம் என அறிவித்தால் ஆசிரியர்களுக்கு நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பதற்காக, அமைச்சர் சிறப்பு ஊதியம் என அறிவித்துள்ளர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்க மாநில செயலாளர் ராஜாதேவகாந்த் கூறியதாவது: ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டம் செய்தோம். 7 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்பது வாழ்வாதாரத்திற்கு எட்டாதது.
கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு நிதி ரூ.31 கோடி ஒதுக்கியும், மாநில அரசு எங்களுக்கு வழங்கவில்லை. தற்போது ரூ.700 சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சரின் பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது. ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.9,200 மற்றும் நிலுவை தொகை ரூ.22,700 தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு நிதியில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 11 மாதம் மட்டுமே ஊதியம் பகுதிநேர ஆசிரியர்கள் ஒரு கல்வியாண்டில் 11 மாதங்கள் மட்டுமே வேலை செய்வார்கள். மே மாதம் பணிக்கு வரக்கூடாது என்ற உத்தரவு உள்ளது.
அதன்படி இவர்களுக்கு 11 மாதம் ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால் கடன் வாங்கி குடும்பம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாகவும் ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment