6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்
ஊதிய குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்கள் கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்ற முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு காலமுறை ஊதியத்தில் கால பணி இடங்களை நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் இன்று முதல்(செவ்வாய்க்கிழமை) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது.கிரிஜா வைத்தியநாதன் காரணம்
இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் கூறியதாவது:–
தமிழ்நாடு அரசு ஊழியர்களுடைய 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 2–ந்தேதி மாநில முழுவதும் உண்ணாவிரத போராட்டமும், மார்ச் 15–ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணியும் நடத்தினோம். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் ஏப்ரல் 25–ந்தேதி(இன்று) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று அரசுக்கு அறைகூவல் விடுத்து இருந்தோம்.
அதற்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். ஆனால் அவரை பேச்சுவார்த்தை நடத்தவிடாமல் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தடுத்து விட்டார்.
5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பு
எனவே நாங்கள் திட்டமிட்டபடி நாளை(இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த போராட்டத்துக்கு வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி துறை, அங்கன்வாடி பணியாளர் சங்கம் உள்பட 61 சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 கோடி வரை இழப்பீடு ஏற்படும். அரசு நிர்வாகமும் முற்றிலும் முடங்கும். இந்த போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அமையும்.
26–ந்தேதி மாநில முழுவதும் வட்ட கிளைகளில் ஆர்ப்பாட்டமும், 27, 28 ஆகிய தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் சாலைமறியலில் ஈடுபட்டு சிறை நிரப்பும் போராட்டமும், 29, 30 ஆகிய தேதிகளில் கண்டன பொதுக்கூட்டங்களும், மே.2–ந்தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதமும், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டமும் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment