இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 25, 2017

நிதியாண்டு மாற்றம்: 10 அம்சங்கள்


டில்லியில் கடந்த ஏப்., 22ம் தேதி நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, ' தற்போது, நாம் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை கடைப்பிடித்து வருகிறோம். இதை ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நிதியாண்டாக மாற்ற முன் வர வேண்டும்' என, கூறினார்.

இந்த நிதியாண்டு மாற்றம் குறித்த, 10 அம்சங்கள் வருமாறு:

1. இந்தியாவில், ஏப்., - மார்ச் நிதியாண்டு, 1867 ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 150 ஆண்டுகளுக்கு முன் இதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்.

2. இதை, ஜன., - டிச., நிதியாண்டாக மாற்ற வேண்டும் என்றால், அது தொடர்புடைய ஏராளமான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக தற்போது ஆண்டுதோறும் பிப்., மாதம் தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டை, ஆண்டுதோறும் நவ., மாதம் தாக்கல் செய்ய வேண்டி இருக்கும். வரி ஆய்வு ஆண்டை மாற்ற வேண்டும். வரி கட்டமைப்பை மாற்ற வேண்டும். பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும் நாட்களையும் மாற்ற வேண்டி இருக்கும்.

3. நிதியாண்டை மாற்றினால், ஏற்கனவே அந்த நடைமுறையை பின்பற்றி வரும் வளர்ந்த நாடுகளுடன் இந்தியாவும் இடம் பெறும். இது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். உலக பொருளாதாரத்துடன் இந்தியா இணைந்து செயல்பட வாய்ப்பு ஏற்படும்.

4. இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது இரண்டு நிதியாண்டுகளை கடைப்பிடிக்கின்றன. ஒன்று, இந்தியாவிற்கு, மற்றொரு நிதியாண்டு,அவர்களின் தலைமை அலுவலகம் உள்ள நாட்டிற்கு ஏற்றவாறு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் நிதியாண்டு மாற்றப்பட்டால், அவர்களின் சிரமம் குறையும்.

5. பொருளாதார ஆலோசனை வழங்கும் சர்வதேச நிறுவனமான, 'கிறிசில்' என்ற நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் டி.கே.ஜோஷி கூறுகையில்,'' இந்தியா சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால், இன்னமும் காலனி ஆதிக்கம் கொண்டு வந்த நிதியாண்டை பின்பற்றுவதில் என்ன நன்மை இருக்க முடியும். உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்த மாற்றம் உதவும்,'' என்றார்.

6. வழக்கமாக பிப்., இறுதியில் தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதை இந்த ஆண்டு முதல் பிப்., 1ம் தேதி, என, மோடி அரசு மாற்றி அமைத்துள்ளது. இதற்கு முன்பே நிதியாண்டை மாற்றுவது குறித்தும் ஆலோசனை தொடங்கி விட்டது.

7. முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சாரியா தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு தான் நிதியாண்டை மாற்றவேண்டும் என, மத்திய நிதி அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிக்கை அளித்தது.

8. அந்த குழு அளித்த அறிக்கையில், ' நிதியாண்டை மாற்றுவதன் மூலம், நாட்டின் பருவமழை காலத்துடன் இணைந்து செயல்பட முடியும். ராபி, காரீப் பருவத்திற்கான பாசனத்தை முன் கூட்டியே திட்டமிட முடியும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. தற்போது மத்திய பட்ஜெட், பிப்., மாதம் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், புதிய நிதியாண்டுக்கான பருவ மழை முன் அறிவிப்பு ஏதும் பிப்., மாதம், மத்திய அரசுக்கு கிடைப்பதில்லை. இதனால், விவசாயம் தொடர்பான வருவாய் - செலவு குறித்த பட்டியல் தயாரிக்க முடிவதில்லை. நிதியாண்டை மாற்றினால், இப்பிரச்னை தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. நிதியாண்டை மாற்றுவதால் பல நன்மைகள் ஏற்பட்டாலும், மத்திய அரசு, மாநில அரசுகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதற்கு ஏற்றவாறு தங்களிடம் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஒரே ஒரு முறை மேற்கொள்ளப்படும் இந்த செலவு தொகை சற்று அதிகம் என்பதால், மத்திய அரசின் ஆலோசனைக்கு சில எதிர்ப்புகள் இருக்க செய்கின்றன. குறிப்பாக, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் இதை எதிர்க்கின்றன. இத்துடன் தற்போது தான் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., வரி மாற்றம் வர உள்ளது. இத்துடன், நிதியாண்டு மாற்றத்தையும் மேற்கொண்டால் ஏகப்பட்ட குழப்பம் ஏற்படும் என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment