அரசுப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இதைப் பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளி மாணவர் சேர்க்கையின் போது மாநில அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற வேண்டும் என அனைத்துத் தலைமை ஆசிரியர்களையும், அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18%, பழங்குடியினருக்கு 1%, பொதுப்பிரிவினருக்கு 31% என வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த இட ஒதுக்கீட்டு முறை பல்வேறு பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என புகார்கள் வந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டி, இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இதை மீறிச் செயல்படும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரவை மீறிச் செயல்படும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் சுட்டிக்காட்ட வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கெனப் பதிவேடு ஒன்று ஆரம்பித்து அனைத்து விண்ணப்பங்களையும் பதிவு செய்து, தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்து, விண்ணப்பங்களைப் பரிசீலித்து அரசு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். மேலும் முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பம் பெற்றே மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டும்.
இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதா? என்பதை நன்கு ஆராய்ந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இயக்குநருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment