உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை களை, ஜூலைக்குள் முடிக்க அவகாசம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. 'உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், 2016 அக்டோபரில், இரண்டு கட்டமாக நடக்கும்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. இதையடுத்து, 'உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கான ஒதுக்கீடு முறையாக இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், 'பழங்குடியினருக்கான ஒதுக்கீடு செல்லும். ஆனால், தேர்தல் அறிவிப்பு முறையாக இல்லை என்பதால், அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது; முறையாக அறிவிப்பு வெளியிட்டு, டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். 2016 அக்., 4ல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் நுாட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' மே, 14க்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்திமுடிக்க உத்தரவிட்டது. இதற்கிடையில், வழக்கில், தன்னையும் இணைத்து கொள்ளும்படி கோரி, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர் நாராயணன் தாக்கல் செய்த மனுவில், 'உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, தேர்தலை, ஏப்., 24க்குள் நடத்த வேண்டும்' என, கூறப்பட்டது. மனு, தற்காலிக தலைமை நீதிபதி, எச்.ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. ஆர்.எஸ். பாரதி சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''மே, 14க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது,'' என்றார். இதையடுத்து,நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர். இந்த வழக்கு, அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையில், நீதிமன்ற அவமதிப்பு மனுவும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் ராஜசேகர் தாக்கல் செய்த மனு: புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகளை, மாநில தேர்தல் ஆணையம் துவக்கி விட்டது. மே மாத இறுதிக்குள் பணிகளை முடிக்கும் நிலையில் இருப்போம். உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை, மாநில தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. பல்வேறு முறையீடுகளை பைசல் செய்யவும், விதிகளில் திருத்தம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இதை உரிய அதிகாரிகள் தான் மேற்கொள்ள வேண்டும். மாநில தேர்தல் ஆணையம் அல்ல.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளை, மே மாதத்துக்குள் முடிக்கவும், தேர்தல் நடவடிக்கைகளை, ஜூலைக்குள் முடிக்கவும், அவகாசம் அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment