தமிழக ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கு ஆன்-லைனில் முன்பதிவு செய்யவேண்டும். இந்த சிறப்பு வசதியை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் புதன்கிழமை (ஏப்.19) தொடங்கி வைக்க உள்ளார். தமிழக ஆளுநர் மாளிகைக்குள் பொதுமக்கள் இதுவரை அனுமதிக்கப்படுவதில்லை.
ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, விருது வழங்கும் விழா உள்ளிட்ட விழாக்கள் நடைபெறும்போது, அழைப்புக் கடிதம் உள்ளவர்கள் மட்டுமே தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்கப்படுவர். ஆளுநர் மாளிகையில் ஏராளமான புள்ளி மான்கள், அரிய வகை 'பிளாக் பக்' வெளி மான் வகைகள் உள்ளன. இவை, ஆளுநர் மாளிகை சாலைகளில் இயல்பாக நடந்து செல்லும். பல்வேறு தரப்பட்ட மரங்களும் அழகிய தோட்டமும் இங்கு இடம்பெற்றுள்ளன. அதுதவிர ஆளுநர் மாளிகையில் 'தர்பார் ஹால்' என்ற அழகிய அரங்கமும் உள்ளது. இவற்றைக் கண்டுகளிக்கும் அரிய வாய்ப்பு பொதுமக்களுக்கு இப்போது கிடைக்க உள்ளது.
இதற்கான ஆன்-லைன் முன்பதிவு வசதியை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் தொடங்கி வைக்க உள்ளார். அதன் பிறகு, ஆளுநர் மாளிகையைச் சுற்றிப் பார்க்க விரும்புவோர் ஆன்-லைனில் முன்பதிவு செய்து தனி நபராகவோ அல்லது குழுவாகவோ சுற்றிப் பார்க்க முடியும். இதற்கு குறைந்தபட்ச பதிவுக் கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே மஹாராஷ்டிரம், ஒடிஸா மாநில ஆளுநர் மாளிகைகள் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment