தமிழகம் முழுவதும் உள்ள 1 கோடியே 65 லட்சம் குடும்ப அட்டைகளுக்கும் இந்த ஆண்டு முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியை துவங்கி வைத்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அன்று முதலே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ரேஷன் கடையில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்டு அனுப்பப்படும் எனவும், அந்த பாஸ்வேர்டு கிடைக்கப்பெற்றவர்கள் சம்பந்தப்பட்டரேஷன் கடைக்கு சென்று தங்களுடைய ஸ்மார்ட் கார்டை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. மேலும் அந்த பாஸ்வேர்டு 15 நாள் வரை பயன்பாட்டில் இருக்கும் எனவும் அதற்குள் ஸ்மார்ட் கார்டை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஒரு சிலருடைய செல்போனுக்கு ஒன் டைம் பாஸ்வேர்டும் அனுப்பப்பட்டது. ஆனால் பெரும்பாலானவர்கள் செல்போனுக்கு ஒன்டைம் பாஸ்வேர்டு கிடைக்கவில்லை. அதே போன்று வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளிலும் குடும்பத்தலைவர், குடும்ப உறுப்பினர்கள் விபரம் போன்றவை பிழைகளுடன் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிழைகளுடன் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து வட்டவழங்கல்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, சென்னையில் ஸ்மார்ட் கார்டுக்கான டேட்டா தயார் செய்யும்போது சுமார் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண் தவறுதலாக பதிவாகி உள்ளது. இதனால் ஸ்மார்ட் கார்டு தயார் செய்தும் உரியவர்களிடம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். செல்போன் எண் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தால் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment