போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், கிளை நுாலகம் உட்பட அனைத்து நுாலகங்களுக்கும், ஆங்கிலப் புத்தகங்கள் வாங்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்றது முதல், பல்வேறு சீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளன. இதற்கு, அமைச்சர் செங்கோட்டையனும் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
அதனால், அண்ணா நுாலகம் மறு சீரமைப்பு, கிளை நுாலகங்கள் புதுப்பிப்பு, ஆசிரியர்கள் இடமாற்றத்தில் விதிகள் மாற்றம், ஆர்.டி.இ., சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை என, பல புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரிசையில், 'அனைத்து நுாலகங்களுக்கும், ஆங்கிலப் புத்தகங்களும் கட்டாயம் வாங்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி மற்றும் பொது நுாலகத்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:நுாலகங்களில், புத்தக தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிளை நுாலகங்கள் உட்பட அனைத்து நுாலகங்களிலும், புத்தகங்களை பராமரிக்கவும், புதிய புத்தகங்கள் வாங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 32 மைய நுாலகங்கள், 241 முழுநேர நுாலகங்கள், 320 கிளை நுாலகங்கள் ஆகியவற்றில், கூடுதலாக ஆங்கிலப் புத்தகங்கள், ஆங்கில வார, மாத இதழ்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது, போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு உட்பட, பல தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பலனளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment