அரசு ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஆளுங்கட்சியான அதிமுக உடைந்து குழப்பம் நிலவி வரும் நிலையில் அரசு ஊழியர் சங்கங்களின் அறிவிப்பால் அரசு நிர்வாகம் மொத்தமாக முடங்கும் நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் 5 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 3.25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 1.1.2016 முதல் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் ஒப்பந்தக் கூலி நியமனங்களை ஒழித்து காலியிடங்களில் முறையான நியமனம் செய்ய வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.25 முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இதற்காக 64 துறை வாரியான சங்கங்கள் இணைந்த அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு கடந்த பிப்.20ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம், மார்ச் 15ல் மாவட்ட தலைநகரங்களில் பேரணி, ஏப்.8ல் அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, ஏப்.15ல் திருச்சியில் மாநில அளவிலான வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஆகியவற்றை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்தியுள்ளது. ஏப்.17ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மத்தியில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் துரைசிங் கூறுகையில், ஏப்.25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறையிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டு மொத்த அரசுத் துறைகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் அரசு அலுவலகங்கள் இயங்காது என்றார். தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுக இரு அணிகளாக உடைந்துள்ளது. அந்த கட்சிக்குள் நடக்கும் குழப்பத்தால், அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தமிழக அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
* அரசு ஊழியர்கள் கடந்த 2003ம் ஆண்டு தமிழக அரசுக்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* அப்போது 1.75 லட்சம் அரசு ஊழியர்களை அப்போதைய முதல்வராக இருந்த ெஜயலலிதா டிஸ்மிஸ் செய்தார்.
* எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்கள் அரசு ஊழியர்கள் மீது பாய்ந்தது.
* பின்னர் கடந்த ஆண்டு 2016ல் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாட்கள் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் செய்தனர்.
No comments:
Post a Comment