தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான வேலை நாள்களைக் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் கல்லூரிகளில் 180 நாள்கள் வகுப்புகள் நடத்த வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 200 நாள்கள். தொடக்கப் பள்ளிகளுக்கு 220 நாள்கள். பெரிய மாணவர்கள் அதிக நாள்கள் வகுப்புகளுக்கு செல்லலாம். ஆனால், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குதான் அதிக வேலை நாள்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்படி பார்த்தால், ஏப்ரல் மாத இறுதி வரையில் வகுப்புகள் நடக்கின்றன.
தமிழகத்தில் தற்போது வெயில் மிகவும் அதிகமாகவே உள்ளது. 107 டிகிரி வரை வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாத இறுதி வரை தொடக்கப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் வெயிலின் தாக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வியர்குரு, அம்மை, கோடை வெயில் கொப்புளம் ஆகியவற்றால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப வேலை நாள்களைக் குறைக்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்கலாம்.
தமிழக அரசும், பள்ளிக் கல்வித் துறையும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விரைந்து தேர்வுகளை நடத்தி, முன்கூட்டியே விடுமுறை அளிக்க வேண்டும் என்பது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்
No comments:
Post a Comment