பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள 6,390 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு கால அட்டவணையை துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். வருங்காலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை இணைய வழி மூலமே விண்ணப்பிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை கூறியது: ஆசிரியர் பிரிவில்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பிரிவில் 2,119 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்ப மே 2-வது வாரத்தில் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும். தேர்வு ஜூலை 2-ஆம் தேதியும், தேர்வு முடிவு ஆகஸ்ட்டிலும் வெளியிடப்படும்.
விரிவுரையாளர் பிரிவில்...பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1,137 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வு அறிவிக்கை ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 13-இல் தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியாகும்.
சிறப்பு ஆசிரியர்கள் பிரிவில்: சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களில் 1,188 காலியாக உள்ளன. இதற்கான அறிவிக்கை ஜூலை 3-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு ஆகஸ்ட் 19-இல் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் நவம்பரில் வெளியாகும். வேளாண் பிரிவில்: வேளாண் கல்வி கற்பிப்போர் பிரிவில் 25 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கு ஜூலை 3-வது வாரத்தில் அறிவிக்கையும், ஆகஸ்ட் 20-இல் எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் நவம்பரில் வெளியாகும்.
உதவிப் பேராசிரியர் பிரிவில்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பிரிவில் 1,883 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கு ஜூலை 4-வது வாரத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு செப்டம்பரில் தேர்வும், அக்டோபரில் தேர்வு முடிவுகளும் வெளியாகும்.
கல்வி அலுவலர் பிரிவில்: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பிரிவில் காலியாகவுள்ள 38 இடங்களுக்குத் தேர்வு அறிவிக்கை ஆகஸ்ட் 2-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30-லிலும், தேர்வு முடிவுகள் டிசம்பரிலும் வெளியாகும். இணையவழி விண்ணப்பம்: வருங்காலங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழி மூலமே விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில தேர்வுகளுக்கு மட்டும் கணினி வழித்தேர்வினை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் கே.ஏ.செங்கோட்டையன். பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் காகர்லா உஷா ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment