தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) 32 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக காலியாக இருப்பதால், தொடக்க கல்வி மாணவர்கள் கல்வித் தரத்தை கண்காணிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பணியிட மாற்றம் அல்லது ஓய்வு பெற்ற பின் இரண்டு ஆண்டுகளாக இத்திட்ட சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
மாறாக, அந்தந்த மாவட்ட ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் இத்திட்டத்தையும் கூடுதலாக கவனிக்கின்றனர். தவிர, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் என மூன்று பெரும் பொறுப்பையும் ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் கண்காணிப்பதால் கடும் பணிச்சுமையில் தவிக்கின்றனர். 'கவலை' கல்வித்தரம்: தொடக்கக் கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை கண்காணிப்பது, மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பது போன்ற முக்கிய பணிகள் இத்திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது 'தலைமை' இல்லாததால் கல்வித் தரத்தை கண்காணிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.சி., பயிற்சி கூட்டங்கள், பல கோடி ரூபாய் திட்டங்களில் நடக்கும் வகுப்பறை கட்டடப் பணிகளை ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் நேரடியாக களஆய்வு செய்வதில்லை. பணிகள் குறித்து அத்திட்ட அலுவலர் காட்டும் ஆவணங்களில் மட்டும் கையெழுத்திடும் பணியை மட்டுமே மேற்கொள்ள முடிகிறது. மறுக்கப்படும் சி.இ.ஓ., வாய்ப்பு: இப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிமூப்பு பட்டியலில் இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு கனவில் காத்திருக்கும் மாவட்ட மற்றும் தொடக்க கல்வி அலுவலர், பதவி உயர்வு பெறாமலேயே 40 சதவீதம் பேர் ஓய்வு பெற்று விட்டனர். மீதமுள்ளவர்கள் பெரும்பாலும் மே யில் ஓய்வுபெற உள்ளனர்.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்ட சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டவை. அவை தொடர்ந்து காலியாக இருக்கக்கூடாது. சி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டு ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் பொறுப்புக்களையும் அவர்களிடம் ஒப்படைத்தால் வழக்கமான கல்வி பணிகளில் 'ரெகுலர்' சி.இ.ஓ.,க்கள் கூடுதல் கவனம் செலுத்த முடியும். ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குவதற்கு முன் இப்பணியிடங்களை நிரப்ப அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயச்சந்திரன் தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment