அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், 12 லட்சம் மாணவ, மாணவியரின், தனிப்பட்ட விளையாட்டுத் திறனை அறிவதற்காக, அவர்களுக்கு, உடல் திறன் கண்டறியும் போட்டியை நடத்த, தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறிவதற்காக, 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, உடல் திறன் கண்டறியும் போட்டியை நடத்த வேண்டும். குழு விளையாட்டு அல்லது தனிநபர் போட்டிகளில், மாணவர்களின் திறனை அறிந்து, அதை மேம்படுத்தும் வகையில், போட்டிகளை நடத்த வேண்டும். வேகமாக ஓடும் ஆற்றலை கண்டறிய, 50 மீட்டர் ஓட்டமும், அதிகமாக தாக்குப் பிடிக்கும் திறனை கண்டறிய, 600, 800 மீட்டர் ஓட்ட போட்டியும் நடத்த வேண்டும். ஜூலை இறுதிக்குள், இந்த போட்டிகளை நடத்தி முடிக்க, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போட்டியில், 10 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அல்லது ஏதேனும் இரு தேர்வுகளில், முறையே, எட்டு அல்லது ஒன்பது மதிப்பெண் பெற்ற மாணவர்களின் ஆற்றல் தரத்தை, இதற்கென தரப்பட்ட படிவத்தில் பதிவு செய்து, அதை, மாவட்ட விளையாட்டு அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். மாணவர் திறன் அறியும் அட்டையில், பெற்றோரின் கையொப்பத்தை பெற வேண்டும். போட்டிகள் முடிந்ததும், அது தொடர்பான முழுமையான அறிக்கையை, இயக்குனருக்கு, ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும், 7,307 அரசு நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், 12.72 லட்சம் மாணவர் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment