ஊரகப் பகுதியிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்வில் 2012–13 கல்வி ஆண்டில் 50 சதவீத மொத்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ–மாணவர்களிடையே திறமை மிக்கவரைத் தேர்ந்தெடுத்து, 9–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரையிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கான படிப்புதவித் தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவியருக்கு (மொத்தம் 100 பேர்) வருவாய் மாவட்டம் தோறும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
அந்த மாணவ –மாணவியரை தேர்ந்தெடுக்க மாநகராட்சி மற்றும் நகராட்சிப்பகுதியில் அமைந்த பள்ளிகளைத் தவிர்த்து, மாநிலம் முழுவதும் ஊரகப் பகுதியில் அமைந்துள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதம் 22–ந்தேதி நடைபெற உள்ளது. மாணவ–மாணவிகள் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதிகள் தற்போது 2013–2014 கல்வி ஆண்டில் தொடர்ந்து 9–ம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத்தேர்வு திட்டத்திற்கு தகுதி படைத்தவராவார்கள்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் வருவாய்த்துறையிலிருந்து பெற்றோரின் வருமானச்சான்று பெற்று அளித்தல் வேண்டும். 9–வது வகுப்பில் படிக்கும் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தினை www.peps.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வருவாய் சான்றிதழுடன், அன்னார் பயிலும் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்று ஆகஸ்டு மாதம் 2–ந்தேதிக்குள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். தேர்வுக்கட்டணம் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் தேர்வுக்கான கட்டணம் ரூ.5 சேவைக் கட்டணம் ரூ.5 சேர்த்து ரூ.10–ஐ பள்ளித்தலைமை ஆசிரியர் மூலமாக பணமாக உரிய முதன்மைக்கல்வி அலுவலரிடம் செலுத்தவேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment