மாவட்ட வாரியாக, சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரை, ரொக்கப்பரிசு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாள், பள்ளிகளில், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, பள்ளிகளில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியருக்கு, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஆட்சியில், விழாவுடன், கூடுதலாக, மாவட்ட வாரியாக, சிறந்த அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என, நான்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, முறையே, 25 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம் மற்றும், 1 லட்சம் ரூபாய் என, மாவட்டத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய், ரொக்கப்பரிசு வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிதியை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த, பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில், நேற்று, காமராஜர் பிறந்த நாள் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறந்த பள்ளியை தேர்வு செய்யும் பணி, விரைவில் துவங்கும் என, பள்ளி கல்வித் துறை, முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார். அவர், மேலும் கூறியதாவது
: மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு, மாவட்டத்தில், சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்யும். இன்னும் ஒரு மாதத்தில், சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம், பரிசுகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய் வீதம், 32 மாவட்டங்களுக்கும், 80 லட்சம் ரூபாய், பரிசாக வழங்கப்படும். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, சபிதா தெரிவித்தார். மாற்றி அமைக்கப்பட்ட இந்த புதிய திட்டம், நடப்பு கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக, செயலர் பிறப்பித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment