ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். ஆசிரியர் தகுதித்தேர்வு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு ரையுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, 23.8.2010 முதல் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு தமிழக அரசு, தகுதித்தேர்வை கட்டாயமாக்கி உள்ளது.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 6½ லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 150 மதிப்பெண் கொண்ட தகுதித்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் அதாவது 90 மார்க் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர் ஆவார்கள்.
தகுதித்தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும். 12 லட்சம் விண்ணப்பங்கள் இந்த ஆண்டு தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17–ந்தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு 18–ந்தேதியும் நடத்தப்படுகிறது. தகுதித்தேர்வை இந்த முறை 7 லட்சம் ஆசிரியர்கள் எழுதுவார்கள் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது.இதை கருத்தில் கொண்டு 12 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன. விண்ணப்பங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விண்ணப்பங்கள் விற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன.
எப்போது கிடைக்கும்? தகுதித்தேர்வு விண்ணப்ப படிவங்கள் 17–ந்தேதி முதல் ஜூலை 1–ந்தேதி வரை விற்பனைக்கு கிடைக்கும். விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வுகட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ரூ.250 மட்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 1–ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் (டி.இ.ஓ. ஆபீஸ்) சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தற்போதைய தகுதித்தேர்வு மூலமாக ஏறத்தாழ 13 ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும், 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணி இடங்களையும் நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு நடுநிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு தேர்வுக்கு முன்பாக அரசு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அந்த காலி இடங்களும் சேர்த்து நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment