ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 97 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்டப் பணிகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 3) வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 998 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றனர். கேரளத்தைச் சேர்ந்த ஹரிதா வி. குமார் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். வெற்றி பெற்றவர்களில் சுமார் 10 சதவீதம் (97 பேர்) தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ் வழியில் எழுதிய 2 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 29 பேர் இந்த ஆண்டு கூடுதலாக சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
தமிழக அளவில் ஏ.அருண் தம்புராஜ் 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியாக கர்நாடகத்தில் பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் டி. பிரபு ஷங்கர் (29) அகில இந்திய அளவில் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றது தொடர்பாக அவர் கூறியது: நான் எம்.பி.பி.எஸ்., எம்.டி. முடித்துள்ளேன். சமூக நல மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றுள்ளேன். சிறிய வயதிலிருந்தே ஐ.ஏ.எஸ்.-ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது 2-ஆவது முயற்சியிலேயே அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சியடைந்துள்ளேன் என்றார் அவர். ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற மொழி முக்கியமல்ல: ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழ் வழியில் எழுதி 91-ஆவது ரேங்க் பெற்றுள்ளார் காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூரைச் சேர்ந்த கங்காதரன் (30).
No comments:
Post a Comment