முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன. வருகிற 31–ந்தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 2,881 காலி இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில் அதிகபட்சமாக தமிழ் பாடத்தில் 605 பணி இடங்களும், ஆங்கிலத்தில் 347, வணிகவியலில் 300, கணிதத்தில் 288, பொருளாதாரத்தில் 257, வரலாறு பாடத்தில் 179 இடங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்கான போட்டித்தேர்வு ஜூலை மாதம் 21–ந் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற இருக்கிறது. தேர்வுக்காக 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன. விண்ணப்ப விநியோகம் 31–ந் தேதி தொடங்குகிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
கடைசி தேதி விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். ஜூன் 14–ந்தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பக்கூடாது. தற்போது 2012–2013–ம் ஆண்டுக்கான காலி இடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட உள்ளது. அண்மையில் சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தியும், ஒரு பள்ளிக்கு தலா 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடம் வீதம் 100 பள்ளிகளுக்கும் புதிதாக 900 பணி இடங்களுக்கு அனுமதி வழங்கியும் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான அரசாணை தேர்வுக்கு முன்பாக வரும்பட்சத்தில் அந்த காலி இடங்களும் இந்த தேர்வுடன் சேர்த்து நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment