: ""பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி அறிவிப்பு, விரைவில் வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் தேவராஜன் கூறினார். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, மாறுதல் "கவுன்சிலிங்', முதன் முதலில் "ஆன்லைனில்', நேற்று துவங்கியது. மதுரை இளங்கோ மாநகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் எட்டு பேருக்கு, பணிமாறுதல் உத்தரவுகளை, தேவராஜன் வழங்கினார். அவர் கூறியதாவது:
"கவுன்சிலிங்கில்' பங்கேற்க மாநில அளவில், இதுவரை 20,203 பேர், விண்ணப்பித்துள்ளனர்; அவை "ஆன்லைனில்' பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம், 30 ஆயிரம் விண்ணப்பங்கள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி அறிவிப்பு, விரைவில் வெளியாகும். தற்போது, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி நடக்கிறது. ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாணவர்களுக்கு சிறப்பு கட்டணம், விரைவில் வழங்கப்படும். பெரும்பாலான பள்ளிகளில், இக்கட்டணத்தை செலவிடாமல், 6 லட்ச ரூபாய் வரை வைத்துள்ளனர்; இதுகுறித்து தகவல் சேகரிக்கப்படும். ஆசிரியர்களுக்கு, "உண்மைத் தன்மை சான்று' வழங்குவதில் ஏற்படும் தாமதம், தவிர்க்கப்படும்.
முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவின்படி, பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 6 ம் வகுப்பில், ஆங்கில வழிக் கல்வியை துவங்கலாம். ஆண்டுதோறும், மத்திய அரசு, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்திற்கு (ஆர்.எம்.எஸ்.ஏ.,), நிதி ஒதுக்குவதால், 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்; இந்த ஆண்டு நிதி கிடைக்காததால், மாநில அரசே முதற்கட்டமாக, 50 பள்ளிகளை தரம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு நிதி கிடைத்தால், மேலும் 50 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். இலவச கட்டாய கல்வி திட்டத்தில், பள்ளிகளில் ஒதுக்கீடு செய்துள்ள, 25 சதவீத இடங்கள் குறித்து, வருவாய் மற்றும் பள்ளி கல்வி அலுவலர் குழுவினர் விசாரிக்கின்றனர். ஆசிரியர்கள் மீது எழும் பாலியல் புகார்கள், 50 சதவீதம் வரை, முன்விரோதம் அடிப்படையில் உள்ளன; புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment