ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரியாகும் கனவுடன், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, மத்திய பணியாளர் தேர்வாணையம் தயாராகி வருகிறது. தேர்வில் பங்கேற்பவர்களின் விடைத்தாள்களை, ஆன் லைனில் வெளியிட ஆலோசித்து வருகிறது. ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக, யு.பி.எஸ்.சி., என்ற மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இது, முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத்தேர்வு என, மூன்று நிலைகளை கொண்டது. முதல்நிலை தேர்வானது, அப்ஜக்டிவ் முறையிலானது. பிரதான தேர்வு, பாட வாரியாக நடத்தப்படும். இத்தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் எழுதிய தேர்வின் விடைத்தாள்களை சரிபார்க்கும் வகையில், விடைத்தாள்களை ஸ்கேன் செய்து, ஆன்லைனில் (இணையதளத்தில்) வெளியிட வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். குறிப்பாக, முதல் நிலை மற்றும் பிரதான தேர்வுக்கான விடைத்தாள்களை வெளியிட வேண்டும் என, கோரி வந்தனர். சிவில் சர்வீசஸ் தேர்வு விடைத்தாளை விண்ணப்பதாரர்கள் பார்க்கும் வசதி இல்லாமல் இருந்தது. குறிப்பிட்ட காரணங்களுக்காக, விடைத்தாள்களை அளிக்க, கடந்தஆண்டு முதல் தேர்வாணையம் முன்வந்தது.
இருப்பினும், தேர்வு நடைமுறைகள் அனைத்தும் நடந்து முடிந்த பிறகே வழங்கப்பட்டது. இந்நிலையில், முதல்கட்டமாக, முதல் நிலை தேர்வுக்கான விடைத்தாள்களை மட்டும்,ஸ்கேன் செய்து இணையதளத்தில் வெளியிடுவது பற்றி தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக, பல அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அனுமதி கிடைத்ததும் திட்டம் செயல்படுத்தப்படும். பின், பிரதான தேர்வு விடைத்தாள்களை வெளியிடுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, மத்திய பணியாளர் நல அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
No comments:
Post a Comment