தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 28, 29 ஆகிய தேதிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக, இந்தக் கலந்தாய்வு வெள்ளி (மே 24), சனிக்கிழமைகளில் (மே 25) நடைபெறுவதாக இருந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதைத் தொடர்ந்து இந்தக் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது, மே 28-ஆம் தேதி மாவட்டத்திற்குள் இடமாறுதல் கோரியவர்களுக்காகவும், மே 29-ஆம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கோரியவர்களுக்காகவும் கலந்தாய்வு நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரி ஆசிரியர் நிலையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர். அண்மையில் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் தமிழகத்தில் அதிகப் பணியிடங்கள் காலியில்லை எனத் தெரிகிறது. ஏற்கெனவே மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ளன. உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆகியவற்றுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment