தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. டி.என்.பி.எஸ்.சி. இணைய தளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம் முறை தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுகள் முடிந்த பின்னரே கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறும்.
ஆனால், இம்முறை முதன்மைத் தேர்வுக்கு முன்னரே சான்றிதழ் சரிபார்ப்பை தேர்வாணையம் மேற்கொள்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் வியாழக்கிழமை அளித்த பேட்டி: துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், துணைப் பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பணியிடங்களில் உள்ள 25 காலிப் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 75,629 பேர் பங்கேற்றனர். இவர்களில் 1,330 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்வில் தகுதி பெற்றவர்கள் தங்களுடைய கல்வித் தகுதி, பிறந்த தேதி, பாலினம், சமூகப் பிரிவு தொடர்பான சான்றிதழ் நகல்களை பதிவுத் தபால் மூலம், ""தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பிரேசர் பிரிட்ஜ் சாலை, வ.உ.சி. நகர், பூங்கா நகர், சென்னை - 600 003'' என்ற முகவரிக்கு அனுப்புவதோடு, தேர்வாணைய இணைய தளத்திலும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும்.
உரிய தகுதி இல்லாதவர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்காக, இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பப்படும் சான்றிதழ்கள் சரிபார்ப்பின்போது தகுதியில்லாத நபர்கள் கண்டறியப்பட்டால், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 1,330 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் முடிவு செய்யப்படும். அதன் பிறகு, முதன்மை தேர்வுக்கான தேதி முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment