தொடக்க கல்வி பட்டய படிப்புக்கு நாளை (27ம் தேதி) முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்க கல்வி பட்டய படிப்புக்கு 2013,14ம் கல்வி ஆண்டில் ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் நாளை முதல் ஜூன் மாதம் 12ம் தேதி வரை விநியோகம் செய்யப்படும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவுக்கான கட்டணம் ரூ.250. இணையதளம் மூலம் ஒற்றைசாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர் எந்த மாவட்டத்தில் விண்ணப்பித்தாரோ அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலோ அல்லது முதன்மை கல்வி அலுவலகத்தால் தேர்வு செய்யப்பட்ட மையத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். அப்போது தமிழகத்தில் எந்த ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கலாம். கல்வி தகுதி மேல்நிலை தேர்வில் குறைந்தபட்சம் 1200க்கு 540 மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
ஆதி திராவிடர், பழங்குடி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். விண்ணப்பதாரர் தொடக்க கல்வி பட்டய படிப்பில் எந்த மொழி பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்கின்றாரோ அம்மொழியை பிளஸ் 2 வரை மொழிபாடத்தில் ஒன்றிலோ அல்லது இரண்டிலோ பயின்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பம் வாங்கிய மையத்தில் ஒப்படைக்க வரும் ஜூன் மாதம் 12ம் தேதி கடைசி நாள் ஆகும்.
No comments:
Post a Comment