தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைத் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை செய்யப்படுகிறது. அவ்வாறு சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் தமிழக அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
2013-2014, 2014-2015-ஆம் கல்வி ஆண்டுகளில் சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் ரூ.97.05 கோடி தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.125 கோடி: 2013-2014, 2014-2015-ஆம் ஆண்டுகளில் சேர்க்கபட்டு 2015-2016-ஆம் ஆண்டில் தொடர்ந்து கல்வி பயின்றுவரும் குழந்தைகள், 2015-2016-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான தொகை ரூ.125 கோடி தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை விரைவில் பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment