கடந்த 2011ல் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக சேர்ந்து பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கவுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை கடந்த மாதம் 1ம் தேதி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் 2010 நவம்பர் 15ம் தேதி, 2011 ஜனவரி 11 மற்றும் 24ம் தேதிகளில் பல்வேறு தனியார் உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்து பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கையை எதிர்த்து, நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சரோஜினி, சுதா உள்ளிட்ட ஏராளமானோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகி, மனுதாரர்களிடம் பள்ளிக்கல்வித் துறை எந்த உத்தரவாதத்தையும் கட்டாயப்படுத்தி பெறவில்லை என்றார். இதைக் கேட்ட நீதிபதி, ‘‘ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர்களாக பணிபுரிவோருக்கு இது கடைசி வாய்ப்பு எனவும், இந்த தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் எனவும், இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவர் எனவும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், கடந்த 2011ம் ஆண்டு முதல்தான் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே அதற்கு முன்பு பணியில் சேர்ந்த தங்களுக்கு இது பொருந்தாது என வாதிட்டுள்ளார். எனவே, 2011ம் ஆண்டுக்கு முன்பிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டியது இல்லை. அவர்களை தேர்வு எழுத சம்மந்தப்பட்ட துறை கட்டாயப்படுத்தக கூடாது.
இத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என அறிவித்த சுற்றறிக்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் 18ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment