தமிழகத்தில், அரசியல் கட்சிகள், கூட்டணிக் காக பல்வேறு உத்திகளை மேற்கொள்ளும் கால கட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலுக்காக, வாக்காளர் பட்டியல் சீரமைக்கும் பணி, நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், அத்துடன் ஆதார் எண் விவரத்தை இணைக்கும் பணி, மும்முரமாகி உள்ளது. இதற்கான தீவிர முயற்சிகளில், தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், அவரது தந்தை பெயர் தமிழில் சரியாக இருப்பதாகவும், ஆங்கிலத்தில் இருக்கும் தவறை திருத்தவும், மனைவி பெயருக்கான ஆங்கில எழுத்து தவறாக இருப்பதையும், சென்னை ஆலந்தூர் சட்டசபை சிறப்பு முகாமில், அவர் திருத்தம் செய்திருக்கிறார். அதே போல தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ஆதார் எண் இணைப்பு மனுவை அளித்தபின், ஆதார் எண் இணைப்பு விஷய நடைமுறைகள், ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பதாக, புகார் கூறியுள்ளார். இத்தகவல்களை சேகரிப்பதில், ஆன் - லைன் முறை சிறப்பாக இருப்பதாகவும், இதுவரை ஆதார் எண் இணைப்பு விவரத் தகவல் சேகரிப்பில், 3.50 கோடி பேர் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில், 2.17 கோடி பேரின் தகவல்கள், உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அப்படிப் பார்த்தால், தமிழகத்தில் உள்ள, 5.6 கோடி வாக்காளர்களில், 45 சதவீதம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை பிழையின்றி இருக்கப் போகிறது என்று அர்த்தம். அடுத்து வரும் முகாம்களுக்கு பின், இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். குறிப்பாக, அரியலூர், தருமபுரி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில், 70 சதவீத வாக்காளர்களிடம் தகவல்கள் பெறப்பட்டதால், இவை முன்னணியில் உள்ளன. பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான கோவை, இதில் உள்ளது.
ஆனால், சென்னை, மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகள் முன்னணியில் இல்லை. வாக்காளர் அட்டை குளறுபடிகளை நீக்க, தேர்தல் ஆணையத்திடம் தகவல் தரும் படிவங்களை பூர்த்தி செய்வதில், படித்தவர்கள் கூட சிரமப்படுகின்றனர். இந்த படிவங்களை எளிதாக்க போவதாக, சக்சேனா அறிவித்தது, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் பிரதிபலிப்பாகும். அது மட்டும் அல்ல; பெயர்களை பதிவு செய்வதில் குளறுபடி, சேகரித்த தகவல்களை கம்ப்யூட்டரில் தவறின்றி பதிவு செய்தல், வாக்காளர் படங்களை இணைத்தல் ஆகியவற்றில், நிச்சயம் 20 சதவீதத்திற்கு மேல் குளறுபடி இருக்கும். இதில், ஆதார் அடையாள அட்டை எண் சேரும்போது குழப்பங்கள் அதிகமாகும். தேர்தல் பணியாற்றும் இடைநிலை ஊழியர் பலரும், இதற்கான முழுப்பயிற்சியை பெற்ற வர்கள் என்று கூற முடியாது. வட்டாட்சியர் மற்றும் அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரி கள் இதை புரிந்து கொண்டிருந்தாலும், கீழ் உள்ள பணியாளர்கள் தகவல் தொழில்நுட்ப நுணுக்கத்துடன் பணியாற்ற முடியாத நிலை உள்ளது. பிரச்னைகளை அறிந்து, தவறுகளின்றி விரைந்து செயல்படும் பணியாளர்களை, இத்துறையில் தேர்தல் கமிஷன் களமிறக்க வேண்டும். அவர்களும், அந்தப் பணி நேரத்தில், மொபைல் பேச்சு உட்பட பல்வேறு தடைகளை தாண்டி, கோரிக்கையுடன் வருபவர்களை முதலில் விசாரித்து, அவர்களின் தேவைகளை கண்டறிந்து, அதற்கேற்ப தீர்வைத் தரும் நடைமுறை தேவை. இல்லாவிட்டால், இதற்கான அலுவலகங்களின் முன் விண்ணப்பங்கள் விற்று, அதைப் பூர்த்தி செய்யும் கூட்டத்தினர் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழகத்தில் போலி வாக்காளர், 15 சதவீதத்திற்கும் அதிகம் என்ற தகவல் ஏற்கனவே உள்ளது. இத்தடவை மேற்கொள்ளும் முயற்சி கள், பிழைகளை பெருமளவு குறைக்கவும், தேர்தலுக்கு முன் வாக்காளர் அடையாள அட்டை, தலைசிறந்த ஆவணமாக மாற வழிகாண வேண்டும்.
ஒவ்வொரு தேர்தலின் போதும், அதற்குரிய சிறப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்த போதும், முழு சீரமைப்புக்கான வழிமுறைகள் இன்னும் வரவில்லை. அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு என்பதால், இக்குறைகள் பெரிதல்ல என்பதைவிட, ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தல் நடைமுறைக்கான ஆவணங்கள் தமிழகத்தில் சீரானால், அரசியல் கட்சிகளின் ஓட்டு சேகரிப்பு முறையிலும், நியாயங்கள் ஏற்படலாம்.
No comments:
Post a Comment