ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுத்து தேர்வு நடத்தி இந்த பணியிடங்கள் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா'. இளைஞர்கள் வங்கிப் பணியாற்றுவதை கவுரவமாக கருதுகிறார்கள். அதற்கேற்ப கணிசமான வேலைவாய்ப்புகளை அறிவிப்பதில் ஸ்டேட் வங்கி முன்னிலை பெறுகிறது. தற்போது இந்த வங்கியில் 2015-16-ம் ஆண்டுக்கான 'புரபெசனரி அதிகாரி' பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தம் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வங்கி பொது எழுத்து தேர்வு மூலம் அல்லாமல், தனியே எழுத்து தேர்வு, நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவதால் பட்டதாரி இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணி பெறலாம்.
பணியின் பெயர் : புரபெசனரி அதிகாரி
பணியிடங்கள் : 2,000 (பொது 812, ஓ.பி.சி.- 541, எஸ்.சி.- 308, எஸ்.டி.- 339)
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் இனி...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-4-15 தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2-4-1985 மற்றும் 1-4-1994 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பின் இறுதி பருவத்தேர்வை எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. இவர்கள் 1-9-15 தேதிக்குள் அல்லது நேர்காணலுக்கு அழைக்கப்படும்போது, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை காண்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகிய தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கட்டணம்:
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் இணையதளம் வழியாக செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 2-5-15-ந் தேதி வரை இணையதள விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும்.
முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்க வேண்டும். இறுதியில் பதிவு எண் மற்றும் ரகசிய குறியீட்டு சொல் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளவும். பூர்த்தியான விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும் கட்டணம் செலுத்தலாம். இறுதியாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதிகள்:
இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 2-5-15
எழுத்து தேர்வு நடைபெறும் காலம் : உத்தேசமாக ஜூன்- 2015
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும், www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment