மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வானது, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசு அதிகாரிகள்- ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது கடந்த 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் பணியாற்றக் கூடிய அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், அதிகாரிகளுக்கும் பொருந்தும். மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்த வேண்டுமெனில், மாநில அரசு தனியாக உத்தரவை வெளியிட வேண்டும். அதன்படி, இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவுப்படி, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வானது 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு பணத்தையும் ரொக்கமாக வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஐஏஎஸ் உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், கணக்காயர் அலுவலகம், தமிழக கருவூலத் துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாநில அரசு ஊழியர்கள்: தமிழகத்தில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் பணிபுரியும் அரசுத் துறை ஊழியர்கள்- அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் என 18 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து, தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதற்கான கோப்புகள் தயார் நிலையில் உள்ளன.
இதுகுறித்த கோப்புகள் கையெழுத்தானவுடன் அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஓரிரு நாள்கள் அல்லது இந்த வார இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்றன.
No comments:
Post a Comment