வீடுவீடாகச் சென்று வாக்காளரின் ஆதார் மற்றும் கூடுதல் விவரத்தை சேகரிப்பதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.
இதுகுறித்து நிருபர்களுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:–
ஆதார் சேர்ப்புத் திட்டம்
வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் பிழையில்லாமல் இருப்பதற்காக மார்ச் 3–ந்தேதியில் இருந்து தேசிய அளவில் என்.இ.ஆர்.பி.ஏ.பி. என்ற திட்டத்தை இந்திய தேர்தல் கமிஷன் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின்படி, வாக்காளர்களின் ஆதார் எண், தொலைபேசி, செல்போன் எண்கள், இ–மெயில் முகவரி போன்ற கூடுதல் விவரங்கள் பெறப்பட்டு, வாக்காளர்களின் அடையாள விவரங்களுடன் சேர்க்கப்படும்.
இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு வீட்டுக்கும் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள் (பி.எல்.ஓ.) வருகைதர உள்ளனர். மார்ச் 25–ந்தேதியில் இருந்து வரும் வீடுகளுக்கு வந்து விவரங்களை பி.எல்.ஓ. சேகரிப்பார்கள். இந்தப் பணியில் 64ஆயிரத்து 99 பேர் ஈடுபடுகின்றனர். தகவல்கள் பெறுதல், தகவல்களை பதிவு செய்தல், தகவல்களை இணைத்தல் என்ற மூன்று முறைகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறோம்.
வீட்டுக்கு வருவார்
ஒரு வாக்குச்சாவடிக்கு கிராமங்களில் ஆயிரத்து 200 வாக்காளர்களும், நகர்ப்புறங்களில் 1,500 வாக்காளர்களும் உள்ளனர். அதாவது, ஒரு வாக்குச்சாவடிக்கு சுமார் 300 முதல் 400 குடும்பங்கள் அடங்கும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் பி.எல்.ஓ. வருகை தருவார்.
அவரிடம் அந்த குடும்பத்தினரின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் விவரங்கள் அடங்கிய தாள் இருக்கும். அதில் கூடுதலாக சேர்க்கப்பட வேண்டிய விவரங்களுக்கான பட்டியல் இடம் பெற்றிருக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் அவர் விசாரித்து, தேவையான தகவலை அங்கிருந்தே அவர் எழுதுவார்.
திருத்தங்கள் செய்யலாம்
மேலும், இறந்து போன உறவினர்களின் பெயர் நீக்கம்; வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேலான இடத்தில் பெயர் இருந்தால் அதன் நீக்கம்; பெயர் திருத்தம்; இடம் மாறியவர்கள் விவரம்; புகைப்படம் மாற்றம் போன்ற திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் அந்த அலுவலரிடம் இருக்கும்.
என்னென்ன திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை கூறினால் அந்த விண்ணப்பத்தை அங்கேயே வைத்து நிரப்பிக் கொடுத்துவிடலாம். அனைத்துத் தகவல்களும் உண்மையானவை என்று குடும்பத்தாரிடம் உறுதி செய்துவிட்டு, அவற்றை தனது கம்ப்யூட்டரில் அலுவலர் சேகரித்துக் கொள்வார்.
தனி மென்பொருள்
ஆதார் அட்டை இருந்தால் அதன் நகலை அலுவலரிடம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அவரே அதை படம் பிடித்துக் கொள்வார். ஆதார் எண் இல்லாதவர்கள், அதற்காக விண்ணப்பித்து இருந்தால் அதற்கான இ.ஐ.டி. நம்பரை கொடுக்கலாம். அதுவும் இல்லாவிட்டால், ஆதார் எண் தரப்படவில்லை என்று குறித்துக் கொள்வார்.
இப்படி அவர் ஒவ்வொரு வீடாகச் சேர்த்த விவரங்கள் அனைத்தையும் தேர்தல் நடத்தும் அதிகாரி (இ.ஆர்.ஓ.) அல்லது உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் (ஏ.இ.ஆர்.ஓ.) கொடுப்பார். அவர்களிடம் தனி மென்பொருள் உள்ளது.
பணிகள் தீவிரம்
அதன்படி, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள தகவல்கள், கூடுதலாக பெறப்பட்ட தகவல்கள், ஆதார் விவரங்கள் போன்றவை தனித்தனியாக கம்ப்யூட்டர் திரையில் தெரியும். அவற்றை அவர்கள் சரிபார்ப்பார்கள். பின்னர் ஆதார் விவரங்கள் உட்பட வாக்காளரிடம் பெற்ற அனைத்து தகவல்களும் ஒன்றாக சேர்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுவிடும்.
அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 13 லட்சம் வாக்காளர்களின் புதிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து வாக்காளர்களிடம் தகவல்களை சேகரித்து வருகின்றனர். இந்தப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இனி ஒரே அட்டைதான்
பதிவு செய்யப்பட்ட விவரங்களை இணைத்ததும், இந்தியாவின் எந்த இடத்திலும் வேறு வாக்காளர் அடையாள அட்டை பெறத் தேவை எழாது. அதை பெறவும் முடியாது. ஏனென்றால், இந்தியா முழுவதும் ஒருவருக்கு ஒரே ஆதார் எண் இருப்பதால், அதனுடன் இணைக்கப்பட்டுவிட்ட பிறகு, ஒருவருக்கு ஒரு வாக்காளர் அடையாள அட்டை என்றாகிவிடும்.
எனவே ஓரிடத்தில் இருந்து இடம் மாறிச் சென்றவர் அடுத்த இடத்தில் மற்றொரு வாக்காளர் அடையாள அட்டையை பெறும் நிலை இனி எழாது. அதுபோல் போலி வாக்காளர் பெயர்ப் பதிவுகள் போன்றவை தவிர்க்கப்படும்.
ஒரே ‘‘டேட்டா பேஸ்’’
தற்போது தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் உள்ள வாக்காளர்களின் தகவல்களை ஒரே மையத்தில் (டேட்டா பேஸ்) இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் இணைக்கப்படும்போது, ஆதார் பதிவிலுள்ள முகவரிக்கும், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முகவரிக்கும் வித்தியாசம் இருந்தால், அதுபற்றி வாக்காளர்களுக்கு இ–மெயில் மற்றும் செல்போன் ஆகியவற்றுக்கு தகவல் அனுப்பி, முகவரியை உறுதி செய்ய கோரப்படும்.
No comments:
Post a Comment