முதுநிலை கல்வியை தமிழில் படிக்காதவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெற முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை புதூரைச் சேர்ந்த ஜே.ஸ்டீபன்ராஜா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு:
தமிழகத்தில் 2013-2014, 2014-15-ம் ஆண்டுகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நான் பிஏ (பொருளாதாரம்), பி.எட் படிப்புகளை தமிழ் வழியில் பயின்றேன். எம்.ஏ (பொருளாதாரம்) ஆங்கில வழியிலும் பயின்றேன். எனக்கு அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான ஒதுக்கீட்டில் வேலை வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, எனக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.சொக்கலிங்கம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசாணையில், தமிழ் வழியில் கல்வி பயின்றோர் யார் என்பது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. முழு கல்வியையும் தமிழில் முடித்தவர்களுக்கு மட்டும்தான் இந்த அரசாணையின்படி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க முடியும்.
இளங்கலை படிப்பையும், முதுகலை படிப்பையும், பிற படிப்புகளையும் தமிழ் வழியில் கற்றவருக்குதான் தமிழில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்க முடியும். மனுதாரர் முதுநிலை கல்வியை ஆங்கிலத்தில் படித்துள்ளார். இதனால் மனுதாரருக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீடு சலுகை பெற முடியாது. எனவே, தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை. எனவே, மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இளங்கலை படிப்பையும், முதுகலை படிப்பையும், பிற படிப்புகளையும் தமிழ் வழியில் கற்றவருக்குதான் தமிழில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்க முடியும்.
No comments:
Post a Comment