ஏ.டி.எம்., மையங்களில், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது, இயந்திரத்தில் இருந்து பணம் வராமல், அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் குறைந்ததாக புகார் அளித்தால், குறிப்பிட்ட வங்கி அபராதத்துடன் தொகையை திரும்ப வழங்கும்.
இதுகுறித்த ரிசர்வ் வங்கியின் வழிகாட்டும் முறையில் கூறியிருப்பதாவது: ஏ.டி.எம்., மையத்தில், பண பரிவர்த்தனை தோல்வியடைந்து, கணக்கில் இருந்து பணம் குறைந்தால், சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று, புகார் படிவத்தை நிரப்பி அளிக்க வேண்டும். அல்லது தொலைபேசி மூலம், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம்.
புகார் கிடைத்த, அடுத்த ஏழு வேலை நாட்களுக்குள், கணக்கில் குறைந்த தொகை வங்கிக் கணக்கில் வரவாகிவிடும். அதற்கு மேல் தாமதமாகும், ஒவ்வொரு நாளுக்கும், 100 ரூபாய் அபராதத்துடன் வங்கி பணத்தை தரும். பண பரிவர்த்தனை நடந்து, 30 நாட்களுக்குள் புகார் அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அபராதம் பெற தகுதியுண்டு. அதற்கு மேல், வங்கியிடம் இருந்து அபராத தொகை கிடைக்காது. ஏழு நாட்களுக்குப் பின், அபராதமின்றி, கணக்கில் குறைந்த தொகை மட்டும் வரவாகி இருந்தால், ரிசர்வ் வங்கியின் புகார் பிரிவில் புகார் அளிக்கலாம். விசாரணையில், வங்கி தரப்பில் தவறு இருந்தால், அபராதம் வழங்க, புகார் பிரிவு உத்தரவிடும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment