தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு மிகையாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கருவூல கணக்குத் துறை இயக்குநர் எஸ்.முனியநாதன் வெளியிட்ட சுற்றறிக்கை விவரம்:
கடந்த 2013-14-ஆம் ஆண்டுக்கான மாநில கணக்காயரின் ஆய்வறிக்கையில் சில மாவட்ட கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதியர்களுக்கு மிகையாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட ஓய்வூதியம் மாநில கணக்காயரால் அல்லது துறை ஆய்வு அலுவலரால் சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் உடனடியாக பிடித்தம் செய்யாமல் நீண்ட காலம் கடந்துள்ளது. இந்தச் செயல்பாடுகள், அரசுக்கு வீணான பண இழப்பினை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், மிகையான ஓய்வூதியம் வழங்கப்பட்ட சம்பவங்களில் அவற்றை பிடித்தம் செய்வதற்கு முன்பாக சில அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய சரியான தொகைக்கு அதிகமாக தொகை வழங்கப்பட்டதாக தெரிய வந்தால், அதனை திருப்பிச் செலுத்துவதாக உறுதிமொழி அளிக்கின்றனர்.
இதற்கான படிவம் 5 ஆகும். அதன் அடிப்படையில், மிகையாக பெறப்பட்ட ஓய்வூதியத் தொகையை ஓய்வூதியதாரர்கள் திருப்பிச் செலுத்த கடமைப்பட்டவர்கள். இதனை தொடர்புடைய ஓய்வூதியதாரர்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.
மிகையாக ஓய்வூதியம் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டவுடன் அது எந்த இடத்தில் எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிந்து, அதனை உடனடியாக பிடித்தம் செய்வது குறித்த விவரங்களை, சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரருக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்கு ஓய்வூதியதாரரிடம் இருந்து பதில் கிடைக்காவிட்டால் பிடித்தம் செய்வதற்குரிய உத்தரவை வெளியிட்டு அதன் நகலை அவருக்கு அனுப்ப வேண்டும்.
மிகை ஓய்வூதியம் பிடித்தம் செய்வதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரருக்கு பதிவஞ்சலில் அனுப்பிய பிறகே பிடித்தம் செய்ய வேண்டும்.
இந்த விஷயத்தில் ஓய்வூதியதாரர்கள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்தால், அந்தத் தடையை விலக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகை ஓய்வூதியம் என அறியப்பட்ட பிறகு, தொகையைப் பிடித்தம் செய்வது தொடர்பான நடவடிக்கை எடுப்பதுடன் சரியான ஓய்வூதியத்தையும் முடிவு செய்ய வேண்டும்.
அதன் பிறகும் தொடர்ந்து மிகை ஓய்வூதியத்திலேயே வழங்குவது தவறாகும். எனவே, சரியான ஓய்வூதியம் மட்டுமே ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது என்பதை கருவூலத் துறையைச் சேர்ந்த அனைத்து அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.
ஓய்வூதியப் பிரிவில் தொடர்ந்து பல ஆண்டுகள் பணிபுரிந்து வரும் கணக்கர்களை, கண்காணிப்பாளர்களை சுழற்சி முறையில் பணிமாறுதல் செய்ய வேண்டும். கருவூல கணக்குத் துறையின் ஆய்வுப் பிரிவு, மண்டல இணை இயக்குநர், கருவூல அலுவலர், கூடுதல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்லும்போது மிகை ஓய்வூதியம் குறித்த நடவடிக்கைகளை ஆராய வேண்டும்.
மிகையாக ஓய்வூதியம் வழங்கி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்குக் காரணமான பணியாளர்கள், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்று தனது சுற்றறிக்கையில் முனியநாதன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment