Saturday, January 17, 2015
அரசுப்பள்ளிகளில் கூடுதலாக 6000 கழிப்பறைகள்
அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கூடுதலாகக் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு கழிப்பறை ரூ.35 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து இந்தப் பணிகளை அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் மேற்கொண்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதிகள் தொடர்பாக கடந்த 2013-14 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தகவல்களை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 1,442 பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறை வசதியும், 4,278 பள்ளிகளில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதியும் இல்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மாவட்ட கல்வித் தகவல் முறையின் கீழ் இந்தத் தகவல் கிடைத்ததும் ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து பள்ளிகளில் புதிதாக கழிப்பறைகள் கட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதேபோல், பயன்படுத்தப்படாமல் உள்ள 300 கழிப்பறைகளிலும் சிறிய அளவிலான பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
490 கழிப்பறைகள்... அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு 490 கழிப்பறைகள் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கழிப்பறையும் தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளும் விரைவில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த நிதியாண்டில் 474 கழிப்பறைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன. புதிய பள்ளிகள் பெரும்பாலும் கழிப்பறைகளுடன் கட்டப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நபார்டு வங்கி நிதியுதவியுடன்... தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 656 கழிப்பறைக் கட்டடங்கள் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன. இதற்கான நிதியுதவியை நபார்டு வங்கி வழங்குகிறது. உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என்பதால் அதிக மாணவர்களுக்கான கழிப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. எனவே, இந்தக் கட்டடங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment