தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கிராமங்களில் செலவு குறைவு என்பதால் அங்கு பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க முடியாது.
அவ்வாறு வழங்கினால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். அதைத் தாங்கும் நிலையில் தமிழக அரசின் நிதிநிலை இல்லை என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும், தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளன. நகரங்களில் பணியாற்றுபவர்களைவிட கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அதிக முக்கியத்துவமும், கூடுதல் ஊதியமும் வழங்க வேண்டும். அப்போதுதான் தகுதியான ஆசிரியர்கள் கிராமங்களில் பணிபுரிய முன்வருவார்கள்.
அதிகமாக வழங்காவிட்டாலும் மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியமாவது வழங்க வேண்டும். ஊதியம் வழங்குவதில் வேறுபாடுகள் தொடர்ந்தால் கிராமப்புறங்களில் கல்வி பாதிக்கப்படும். எனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment