யாரும் எதிர்பாராத வகையில், வங்கிகளுக்கான, 'ரெப்போ' வட்டி வீதத்தை, ரிசர்வ் வங்கி, 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வாகனங்கள் மற்றும், வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கைக்கு, தொழில் துறையினரும், வங்கியாளர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, பணவீக்கம் குறைந்துள்ளது, உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு போன்ற காரணங்களால், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான, 'ரெப்போ' வட்டி வீதம், 8.0 சதவீதத்தில் இருந்து, 7.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி வீதம், 7 சதவீதத்தில் இருந்து, 6.75 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு வீதத்தில் மாற்றமில்லை. அது, 4 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர், 3ம் தேதி, ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி ஆய்வு கொள்கையில், 'பணவீக்கம் உட்பட, பல அம்சங்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில், வட்டி வீதம் குறித்து முடிவு எடுக்கப்படும்' என, தெரிவித்திருந்தது. அது, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அதேநேரத்தில், கடந்த நவம்பரில் மொத்த விலை பணவீக்கம் பூஜ்யத்தை எட்டியிருந்தது. இது, டிசம்பரில் 0.11 சதவீதமாக உயர்ந்தது. இதே கால கட்டத்தில், சில்லரை விலை பணவீக்கம், 4.38 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக சற்றே உயர்ந்தது.
ஆனாலும், இது, ரிசர்வ் வங்கியின், 6 சதவீத இலக்கிற்குள்ளேயே உள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின் தற்போது வரை, சர்வதேச கச்சா எண்ணெய் விலை, 60 சதவீதம் குறைந்துள்ளது. இது போன்ற காரணங்களால், ரிசர்வ் வங்கி, வரும் பிப்ரவரி, 3ம் தேதி வெளியிட உள்ள நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி வீதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றே, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், திடீரென, ரெப்போ வட்டி வீதத்தை குறைத்து, நிதிச் சந்தைக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். 18 மாதங்களுக்கு முன், அதாவது, 2013 மே மாதம் தான், ரெப்போ வட்டி வீதம், 7.50 சதவீதத்தில் இருந்து, 7.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதன் பின், உயர்த்தப்பட்ட ரெப்போ வீதம், சமீப நாட்கள் வரை குறைக்கப்படவில்லை. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, வட்டி வீதத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும், 'காலம் கனியவில்லை' என்று கூறி வந்த ரகுராம் ராஜன், அதிரடியாக தற்போது வட்டி வீதத்தை குறைத்து பல தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட வங்கிகளும், தொழில்துறையினரும், ரிசர்வ் வங்கியின் முடிவை வரவேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment