திருப்பூரில், 12வது புத்தக திருவிழா வரும் 30ல் துவங்கி, பிப்., 8 வரை நடக்கிறது.
பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் சார்பில், 12ம் ஆண்டு புத்தக திருவிழா, திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரே உள்ள கே.ஆர்.சி., சிட்டி சென்டர் வளாகத்தில், வரும் 30ல் துவங்குகிறது. பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் 105 ஸ்டால் அமைக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான தலைப்புகளில், லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறும். தினமும் காலை 11:00 முதல் இரவு 9:30 மணி வரை கண்காட்சி நடைபெறும்.
வரும் 30ம் தேதி மாலை 6:00 மணிக்கு, துவக்க விழா நடக்கிறது. 31ல், "தீக்குள் விரலை வைத்தால்...' என்ற தலைப்பில், ஆதவன் தீட்சண்யா; "இசையாலே மனம் வசமாகும்' என்ற தலைப்பில் பாஸ்கர் பேசுகின்றனர். பிப்., 1ல், "சமூக அநீதிகளை எதிர்த்து போராடாத மக்கள் குற்றவாளிகளே' என்ற தலைப்பில், நந்தலாலா நடுவராக இருக்கும் வழக்காடு மன்றம் நடக்கிறது. பிப்., 2ல், "தேசம் போகும் பாதை புதிது, ஆனால்?' என்ற தலைப்பில் மனுஷ்யபுத்திரன்; "பெரிதினும் பெரிது கேள்' என்ற தலைப்பில் கவிஞர் உமா மகேஸ்வரி பேசுகின்றனர். வரும் 3ல், பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் (இடைநிலை கல்வி) கார்மேகம், மாநகராட்சி கமிஷனர் அசோகன், முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆகியோர், மாணவர்களுக்கு பரிசு வழங்குவர்.
வரும் 4ல், "வேதம் புதுமை செய்' என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன்; "நல்லவை நாடி... இனிய சொலின்' என்ற தலைப்பில், போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு பேசுகின்றனர். வரும் 5ல், தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் இயக்குனர் செல்லப்பனார், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், எழுத்தாளர் தேவி சந்திரா ஆகியோரின் சிறப்புரை இடம் பெறுகிறது.வரும் 6ல் "மதம் எனும் பேய் பிடியாதிருக்க...' என்ற தலைப்பில், பீட்டர் அல்போன்ஸ்; "மணியும், பதரும்' என்ற தலைப்பில், முன்னாள் எம்.பி., சுப்பராயன் பேசுகின்றனர். வரும் 7ல், "சரித்திரம் தேர்ச்சி கொள்' என்ற தலைப்பில், பேராசிரியர் அருணன்; "அடைபடும் வாசல்கள்' என்ற தலைப்பில் எழுத்தாளர் பாலமுருகன் பேசுகின்றனர். நிறைவு நாளான பிப்., 8ல், "இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்கு காரணம், கற்பனை வளமே! - கருத்துச்செறிவே!' என்ற தலைப்பில், புலவர் ராமலிங்கம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
Tuesday, January 27, 2015
12 வது திருப்பூர் புத்தகத் திருவிழா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment