மாநிலம் முழுவதும், 50 அரசு நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த காலம், கடந்த நடவடிக்கையால், 9, 10ம் வகுப்பில், மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, "50 நடுநிலைப் பள்ளிகள், நடப்பு கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்படும்' என்ற அறிவிப்பை, முதல்வர், ஜெயலலிதா வெளியிட்டார். கல்வியாண்டு துவங்கி, நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. காலாண்டு தேர்வும் முடிந்துவிட்டது. கல்வி ஆண்டு துவக்கமான, ஜூனில் அறிவித்திருந்தால், 50 நடுநிலைப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர், தொடர்ந்து, அதே பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்திருப்பர்.
ஆனால், அரசின் காலம் கடந்த நடவடிக்கையால், எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும், வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். பெரும்பாலான மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், தரம் உயர்த்தப்பட்டு உள்ள, 50 நடுநிலைப் பள்ளிகள் பட்டியலை, தமிழக அரசு, வெளியிட்டு உள்ளது. மாவட்டதிற்கு, ஒன்று அல்லது இரு பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. ஒரு பள்ளிக்கு, ஐந்து பட்டதாரி ஆசிரியர் வீதம், 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 250 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, அவை, பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அரசுக்கு, ஆண்டுக்கு, 7.41 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் படிக்கும், பிற வகுப்பு மாணவர்களுக்காக, ஏற்கனவே உள்ள நடுநிலைப் பள்ளிகள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கொண்ட, ஆரம்ப பள்ளிகளாக, நிலை குறைக்கப்படும் என்றும், அரசு தெரிவித்து உள்ளது. அதன்படி, அதே பள்ளி வளாகத்தில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்புகளுடன், ஆரம்ப பள்ளி தனியாக செயல்படும். ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை கொண்ட வகுப்புகள், உயர்நிலைப் பள்ளிகளாக செயல்படும்.
No comments:
Post a Comment