யார் தலைமையில் செயல்படுவது என, ஆசிரியர் இயக்கங்களிடையே, போட்டா போட்டி நிலவுவதால், ஊதிய உயர்வு கேட்டு, தமிழக அரசுக்கு எதிராக போராடுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 28,593 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில், 85,324 ஆசிரியர்களும், 9,259 நடுநிலைப் பள்ளிகளில், 66,056 ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, 1988ம் ஆண்டில் இருந்து, 21 ஆண்டுகளாக, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது. 2009ல், 6வது ஊதியக் குழுவில், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியமாக, 9,300 ரூபாயும், தர ஊதியமாக, 4,200 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் தமிழக ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியமாக, 5,200 ரூபாயும், தர ஊதியமாக, 2,800 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. ஆசிரியர்களின் எதிர்ப்பால், மீண்டும் தனி ஊதியமாக, 750 ரூபாய் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும், தமிழக ஆசிரியர்களுக்கு, 8,550 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. சமீபத்தில் வெளியான பரிந்துரையிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, 1 ரூபாய் கூட ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. இதையடுத்து, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை (டிட்டோ-ஜாக்) அமைத்து, அரசுக்கு எதிராக போராட, ஆசிரியர் இயக்கங்கள் திட்டமிட்டன.
ஆனால் தமிழகத்தில், தொடக்கப் பள்ளி கூட்டணி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆசிரியர் மன்றம், ஆசிரியர் கூட்டணி என, ஏராளமான ஆசிரியர் சங்கங்கள் இருப்பதால், யார் தலைமையில் போராடுவது என, அச்சங்கங்களிடம் போட்டா போட்டி நிலவுகிறது. இதனால் சமீபத்தில், சென்னையில் நடந்த ஆசிரியர் சங்கங்களுக்கான, ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கூட, சில முக்கிய சங்கங்கள் பங்கேற்கவில்லை. இதையடுத்து, ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.
No comments:
Post a Comment