பாடத்திட்டம் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. மாநில அரசு ஒப்புதல் வழங்கியவுடன் அந்தந்தப் பாடங்களுக்கான புத்தகங்களை எழுதும் பணி தொடங்கும் என வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தகங்களை எழுதவும், புத்தகங்களில் குறைபாடுகளை சரி செய்யவும் குறைந்தபட்சம் பத்து மாதங்கள் வரை ஆகலாம். புதிய புத்தகங்கள் 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம்தான் தயாராகும்.
எனவே, பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் 2015-16 கல்வியாண்டிலிருந்தும், பிளஸ் 2 வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் 2016-17 கல்வியாண்டிலிருந்தும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷணராவ் தலைமையில் துணைக்குழு அமைக்கப்பட்டது. இந்தத் துணைக்குழு மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக 25 பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது.
புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வதற்காக பள்ளிக் கல்வித் துறைக்குக் கூடுதலாக பொறுப்பு வகிக்கும் உயர் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் வல்லுநர் குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வல்லுநர் குழுவிடம் இப்போதுள்ள பாடத்திட்டத்தில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள், புதிதாக சேர்க்கப்படவுள்ள பகுதிகள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்துக்கு வல்லுநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்குச் செல்லும்போது மிகவும் திணறுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கு பொறியியல் கணிதம் ஒரு பாடமாகவே வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதியப் பாடத்திட்டத்தில் கணிதம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்கள் பெரிய அளவிலான மாற்றங்களுக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment