ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள காலியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 539 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நடப்பு கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக ஒற்றைச் சாளர முறையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஜூலை 8 முதல் 15 வரை நடைபெறுகிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 17 ஆயிரத்து 45 காலியிடங்கள் உள்ளன. அவை ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்பட உள்ளன. தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேரத் தகுதி வாய்ந்த மேனிலைக் கல்வி முடித்த மாணவர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 430 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் அசல் சான்றிதழ்களான பத்தாம் வகுப்பு மேல்நிலைக் கல்வித் தேர்ச்சிக்கான சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகள் அல்லது மகள் போன்ற சிறப்புப் பிரிவினராக இருப்பின் அதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை கலந்தாய்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
ஜூலை 8- ஆம் தேதி சிறப்புப் பிரிவு, சிறுபான்மை மொழியியல் பயில விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். ஜூலை 9-ஆம் தேதி தொழிற்பிரிவு மாணவர்களுக்கும், ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கலைப்பிரிவு மாணவர்களுக்கும், ஜூலை 12, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவியர்களின் தர வரிசைப் பட்டியல் மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெறும் இடம் அனைத்தும் www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment