பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட். படிப்பிற்குப் பதிலாக எம்.பில்., பி.எச்டி. பட்டங்களைப் பெற்றிருந்தாலும் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வைப் பெறலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சி., தேர்வு பெற்ற பிறகு முதல் ஊதிய உயர்வைப் பெறுகின்றனர். அவர்கள் ஆசிரியர்களாகவோ, தலைமையாசிரியர்களாகவோ பணிபுரியும்போது எம்.எட் பட்டம் பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க ஆணையிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பல்கலைக்கழகங்களில் தொலைநிலைப் பாடப்பகுதிகளில் எம்.எட். பட்டம் நீக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, அவர்கள எம்.எட். கல்வித் தகுதியை பெற முடியாத சூழல் உள்ளது. எனவே, இப்போது எம்.பில். அல்லது பி.எச்டி. பட்டம் மட்டுமே தொலைநிலைக் கல்வி நிறுவனங்களில் பெறும் சூழல் நிலவுகிறது. பட்டதாரி ஆசிரியர் மொத்த பணிக் காலத்தில் 2 ஊக்க ஊதிய உயர்வுகளை மட்டுமே பெறமுடியும் என்ற நிலையில், இரண்டாவது ஊக்கத் தொகை பெற தகுதியான உயர் கல்வி எம்.எட். மட்டுமே என்பதை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த தமிழக அரசு, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற உயர் கல்வி தகுதியாக எம்.எட் மட்டுமே என்பதற்குப் பதிலாக, எம்.எட். அல்லது எம்.பில் அல்லது பி.எச்டி. பெற்றிருந்தாலும் அதை உயர் கல்வியாகக் கருதி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனினும், ஒரு ஆசிரியரின் பணிக்காலத்தில் அதிகபட்சமாக 2 ஊக்க ஊதிய உயர்வுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment