தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை தமிழகம் முழுவதும் அடுத்த கல்வி ஆண்டில் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கில வழிக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இதை தவிர்க்க, அனைத்து குழந்தைகளுக்கும் சமவாய்ப்பு கிடைக்க நடப்பு கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள துவக்கப் பள்ளிகளில், தேர்வு செய்யப்பட்ட 320 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை பெற்றோர்கூட தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தலா 2 பிரிவுகள் ஆங்கில வழி கல்வியில் இருக்கும்.
இதுவரை ஊராட்சி தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இல்லை. தற்போது இந்த பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 லட்சத்து 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள். துவக்கப் பள்ளி நிலையிலேயே இந்த ஆண்டு ஆங்கில வழி தொடங்கப்பட்டதால் 24 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக ஆங்கில வழியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் கோவையில் தொடக்கக் கல்வி இயக்குனரின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 24 வகையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகளை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கியுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது 10 துவக்கப் பள்ளிகளை ஆங்கில வழி இணைப்பு பள்ளிகளாக தேர்வு செய்ய வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ள பள்ளிகளின் முழு விவரங்களையும் ஜனவரி மாதத்திற்குள் மாநில தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் அவரவர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலா 10 துவக்கப்பள்ளிகள் வீதம் மாவட்டம் முழுவதும் 100 பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூறுகையில், ‘மாவட்டத்திற்கு 100 பள்ளிகள் என்றாலும் 32 மாவட்டத்திற்கும் 3,200 தொடக்கப் பள்ளிகள் ஆங்கில வழி இணைப்புப் பள்ளிகளாக அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வரும். ‘ என்றனர்.
இணைப்பு பள்ளி என்றால் என்ன? தொடக்க பள்ளிகளில் தமிழ் வழி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில், ஆங்கில வழியில் படிக்க விருப்பம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, அதே பள்ளியில் அவர்களுக்கு ஆங்கில வழியில் தனியாக வகுப்புகளை நடத்துவது இணைப்பு பள்ளி (பேரலல் இங்கிலீஷ் மீடியம்) என்று அழைக்கப்படுகிறது. ஆங்கில வழியில் கற்க மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினால், பின்னர் அதே வளாகத்தில் தனியாக கட்டிடமும் கட்டப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment