தமிழகம் முழுவதும் திருத்தியமைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.புதிதாக விண்ணப்பித்தோருக்கு வருகிற 25 ஆம் தேதி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, 2013 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு நடந்து முடிந்தது.அதன்பின், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில், புதிதாக பெயர் சேர்க்க 23 லட்சத்து 37,934 பேர், பெயர் நீக்க 2 லட்சத்து 38,617 பேர், திருத்தம் செய்ய 2 லட்சத்து 66,225 பேர், பெயர் முகவரி இடம் மாற்ற ஒரு லட்சத்து 12,596 பேர் விண்ணப்பித்திருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து படிவங்களின் விவரமும் கணினியில் பதிவு செய்யப்பட்டு, கள விசாரணைகள் மேற்கொள்ள்ப்பட்டன.
இந்நிலையில்,இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள்,இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். சென்னையில் ரிப்பன் மாளிகையில் ஆணையர் விக்ரம் கபூர்,சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கான பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அமைவிடங்கள்,அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். புதிதாக விண்ணப்பித்தோருக்கு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தினமான வரும் 25 ஆம் தேதி வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில்,"தமிழகம் முழுவதும் 5.15 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக சுமார் 22 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் தினமான வரும் 25 ஆம் தேதி அடையாள அட்டை வழங்கப்படும்.
புதிய வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச் சாவடி அமைவிடங்கள்,அந்தந்த மண்டல அலுவலகங்கள்,தாலுகா அலுவலகங்களில் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
No comments:
Post a Comment