மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவரின் வெற்றி, தோல்வியில், பெற்றோர்களை விட ஆசிரியர்களுக்கே அதிக பங்கு உள்ளது. மாணவர்களை, சிறந்த மனிதராக மாற்றுவது ஆசிரியர் தான். வாழ்க்கை என்றால் என்ன, சமூகத்தில் மாணவரின் பங்கு ஆகியவற்றை ஆசிரியர்கள் தான் சொல்லித் தருகின்றனர்.
ஆசிரியரின் பழக்க வழக்கங்கள், அப்படியே மாணவரையும் தொற்றிக்கொள்ளும். எனவே, பொறுப்பை உணர்ந்து மாணவருக்கு ஆசிரியர், உண்மையான வழிகாட்டியாக இருக்க வேண்டும். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான், சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.
எப்படி வந்தது:
சிறந்த கல்வியாளராகவும், தத்துவ மேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால், பெருமை என கூறினார்.
ஆசிரியர் தொழிலில் இருந்த ஈடுபாடு காரணமாக, அவர் இவ்வாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி கலாம், "சிறந்த ஆசிரியர் என்பவர், சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவரின் மனதில், நன்னெறிகளை வளர்க்க முடியும்' என்கிறார்.
ஏன் இந்த முரண்பாடு:
தற்போது ஆசிரியர் - மாணவர் உறவில் பல பிரச்னைகள் எழுகின்றன. இந்த உறவு, பள்ளிகளைத் தாண்டியும் தொடர வேண்டும். ஆசிரியர், மாணவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் விரும்பத்தாகத சம்பவங்களை தடுக்கலாம். பட்டதாரி ஆசிரியரை விட, ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் பணி இன்றியமையாதது. ஏனெனில், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது எளிதான விஷயமல்ல.
உங்கள் கடமை:
மற்ற பணிகளைப் போல, ஆசிரியர் பணியில் சாதித்து விட முடியாது. பொறுமை, அர்ப்பணிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் தான், தரமான கல்வியை அளிக்க முடியும். மாணவரைப் போல, ஆசிரியரும் அறிவை பெருக்கிக்கொள்ள தயங்கக் கூடாது. தற்போது ஆசிரியர் ஆவதற்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இது வரவேற்கத்தக்க விஷயம். கல்விக்கு தான் அரசு, அதிக நிதி ஒதுக்குகிறது. இந்த நிதி, உண்மையில் கல்வியை வளர்க்க பயன்பட வேண்டும்.
கவுரவம்:
ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று, கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றை ஜனாதிபதியே வழங்கி கவுரவிக்கிறார். இது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பெரிய கவுரவம்.
No comments:
Post a Comment